Dharul Hudha Ladies College For Arabic & Islamic Studies.

Main Street
Maruthamunai-32314
Kalmunai, Sri Lanka
Tel : +94672226424

பெண்கள் தொழில் செய்தல்

தொடர்பான ஷரீஆவின் கண்ணோட்டம்

மவ்லவியா தானியா அப்துல் ஹாதி (ஹூதாஇய்யா)B.A

மனித சமூகத்தில் ஒரு பாதி ஆண் என்றால் மறு பாதி பெண்ணாவாள். ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் போலவே இஸ்லாத்தில் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாறாக பெண்ணிலைவாதம் (feminism) என்ற பெயரில் நவீனத்துவவாதிகள் கோஷம் எழுப்புவதைப் போல பெண்களை செயலிழக்கச் செய்து அவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை இஸ்லாம் கொண்டிருக்கவில்லை. பெண்களின் உரிமைகள் அனைத்தையும் அவர்களது உடற் கூறுகளுக்கும், இயல்புகளுக்கும் ஏற்ப அல்லாஹ் வழங்கியுள்ளான்.

இந்த வகையில் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் எவ்வாறு சமூக, கல்வி, ஆண்மீக மற்றும் அரசியல் உரிமைகளை வழங்கியுள்ளதோ அதே போண்று பொருளாதார உரிமைகளையும் வழங்கியுள்ளது. இஸ்லாத்தில் பெண்கள் தொழில் செய்தல் தொடர்பாக நாம் ஆராய முன்பதாக இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியுள்ள பொருளாதார உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கிறோம். அதாவது பொருள் திரட்டும் உரிமை, வாரிசுரிமை, வியாபார, வணிகத் துறைகளில் ஈடுபடும் உரிமை, ஸதகா செய்யும் உரிமை, வக்பு செய்யும் உரிமை, விரும்பிய வழியில் பணத்தை செலவிடும் உரிமை மற்றும் வஸிய்யத் செய்யும் உரிமை போண்றவற்றை வழங்கியுள்ளது. இவை தவிர வீட்டில் பண ரீதியான திட்டமிடல், ஹலாலான வழியில் உழைக்க கணவனுக்கு ஒத்துழைப்பு வழங்கல், செலவினங்களில் நடுநிலையைக் கையாளுதல், உழைப்புக்கும், செலவுக்கும் இடையே சமநிலை பேணுதல் போண்ற இன்ன பிற பொருளாதார ரீதியான பொறுப்புகளையும் கடமைகளையும் கூட இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

இவ்வாறான பொருளாதார ரீதியான உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகள் என்பவற்றை வழங்கிய இஸ்லாம் பெண்களுக்குரிய பணிகள் எவை? என்பதையும் வகுத்துத் தந்துள்ளது. ஒரு பெண்ணின் முதலாவது பணி சந்ததிகளை உருவாக்குவதுதான். இதற்கேற்ற அமைப்பிலேயே அல்லாஹ் அவர்களைப் படைத்துள்ளான். இந்த மகத்தான பணியைப் பாதிக்கும் வகையில் எந்த செயற்பாடும் அமைந்துவிடக் கூடாது. ஏனெனில் மனித சமுதாயத்தின் இருப்பு இவர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.

இன்னும் ஒரு பெண் வீட்டில் மிகவும் பொறுப்பு வாய்ந்தவளாக காணப்படுகின்றாள். வீட்டைக் கவனிப்பது, கணவனை மகிழ்விப்பது, அமைதியும், அன்பும், பாசமும் நிறைந்த மகிழ்ச்சிகரமானதொரு குடும்பத்தை உருவாக்குவது என்பன பெண்ணின் அடிப்படைப் பணிகளாகும். இது பற்றி நபி(ஸல்) அவர்கள் '' ஒரு பெண் தனது கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைகளுக்கும் பொறுப்புதாரியாவாள். அவர்கள் அனைவர் பற்றியும் அவள் மறுமையில் விசாரிக்கப்படுவாள்' ( ஆதாரம் புஹாரி : 893 ) என்று கூறியதிலிருந்து வீட்டில் பெண்களின் பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பது தெரியவருகின்றது.

இந்த அடிப்படையில் ஒரு பெண் இல்லத்தரசியாக இருந்து பணிபுரிய வேண்டும் என்பதை இஸ்லாம் விரும்புகின்றது. பெண்ணினது பணிகள் மகத்தானவை, மிக விரிந்து பரந்தவை. அவள் அன்பாலும், பாசத்தாலும் தனது குடும்பம் எனும் நிறுவனத்தைக் கட்டியெழுப்பும் மகத்தான பணியைச் சுமக்கின்றாள். மேலும் தனது பிள்ளைகள் மீது அன்பு காட்டி, சமூக உணர்வுகளை அவர்களுக்கு ஊட்டி வளர்க்கும் பொறுப்பு பெண்ணுக்குரியதாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு பொருத்தமான செயற்களம் எது? பெண்களுக்குப் பொருத்தமான செயற்களம் எது? என்பன தனித்தனியாகக் குறிப்பிட்டு வந்துள்ளது. ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் வெளியே சென்று தொழில் செய்து குடும்பத்தினைக் காக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது.

ஆனால் பெண்களுடைய செயற்களம் அவர்களது வீடாகும். இதனைத் தவறாக புரிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் பெண்களது செயற்களம் வீடு என்பதற்காக அவர்கள்; வீட்டில் மட்டுமே முடங்கிக் கிடக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தவில்லை. மாறாக இஸ்லாமிய வரலாற்றில் பெண்கள் வீட்டுக்கு வெளியே பல்வேறு துறைகளிலும் மிளிர்ந்துள்ளார்கள். எந்தளவுக்கெனில் போர்க்களம், தஃவாப் பணிகள், வியாபாரம் என்று பல்வேறு துறைகளிலும் பெண்கள் பங்கு கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு வரலாற்றில் சஹாபாப் பெண்கள் தங்களது வீட்டுப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றிக் கொண்டே பல்வேறு துறைகளிலும் பங்கு கொண்டுள்ளனர்.

இஸ்லாத்தில் பெண்கள் தொழில் செய்வதைப் பொறுத்தவரை இஸ்லாம் இவ்வுரிமையைப் பெண்களுக்கு வழங்கியுள்ளது. இது போன்றே ஒரு பெண் தொழில் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதையும் இஸ்லாம் பெண்களுக்கு அனுமதித்துள்ளது. நபி(ஸல்) அவர்களது காலத்திலுள்ள பெண்கள் தொழில் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது.

தாதுந்நிதாகைன் என்று கூறப்படும் அபூபக்ர் (றழி) அவர்களது மகள் அஸ்மா (றழி) அவர்கள் தனது கணவர் சுபைர் இப்னுல் அவ்வாம் (றழி) அவர்களுடன் தொழிலைச் செய்ய பக்கபலமாக இருந்தார்கள். மதீனாவில் இருந்தது சில கிலோமீட்டர் தொலைவில் அவருக்குச் சொந்தமான நிலமொன்றிருந்தது. அங்கு அஸ்மா(றழி) அவர்கள் நடந்து சென்று வருவார். தனது குதிரைக்கு உணவு கொடுப்பதற்காக விதைகளை இடித்து தயார்படுத்துவார். இன்னும் சில பெண்கள் வீட்டுக்கு வெளியே வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம் 2182 )

எனவே பெண்கள் வீட்டை விட்டு வெளியேறித் தொழிலுக்காகச் செல்வது ஹராம் அல்ல என்பதை இவற்றில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்த வகையில் ஒரு பெண் தொழில் புரிய வீட்டை விட்டு வெளியேறிச் செல்வது அடிப்படையில் (முபாஹ்) ஆகுமான ஒரு விடயமாகும். சில சந்தர்ப்பங்களில் சமூகத்தில் பெண்கள் தொழில் செய்வதற்கான தேவையும், அவசியமும் காணப்படுவதால் இந்த உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு குர்ஆன், சுன்னா நிழலில் வழங்கியுள்ளது. எனவேதான்; ஒரு பெண் தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்வதாயின் ஷரீஅத் கூறும் பின்வரும் நிபந்தனைகளைப் பேண வேண்டும்.

• மார்க்கம் அனுமதிக்கும் தொழிலாக இருத்தல் வேண்டும்.

மார்க்கம் அனுமதிக்காத தொழில்களில் ஈடுபடுவது பெண்களுக்கு ஹராமாகும். இதற்கு உதாரணமாக பெண்கள் வங்கிகளில் பணி புரிதல், ஆட்சியாளராகப் பணி புரிதல், பாடகியாகப் பணி புரிதல், மதுபானக் கடைகளில் பணி புரிதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

• கணவன் அல்லது பாதுகாவலரது அனுமதியைப் பெறல்.

மனைவி தனது கணவனது அனுமதியைப் பெற்ற பின்னரே வேலைக்காக வெளியேறிச் செல்ல வேண்டும். ஏனெனில் கணவன் அவளுக்கு பொறுப்புதாரராக நியமிக்கப்பட்டுள்ளான். திருமணம் முடிக்காத பெண்னைப் பொறுத்தவரையில் அவளும் தனது பாதுகாவலர் அல்லது பொறுப்புதாரியிடம் அனுமதி பெற்ற பின்பே தொழில் நிமித்தம் வெளியேறிச் செல்ல வேண்டும். ஏனெனில் இந்தப் பெண்ணுக்காக அவரே அல்லாஹ்விடம் பொறுப்பு கூற வேண்டும்.

இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள். உங்களது மேய்ப்பைப்பற்றி நாளை மறுமையில் நீங்கள் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சி தலைவரும் பொறுப்புதாரரே அவர் தன் பொறுப்பு பற்றிக் கேட்கப்படுவார். ஒரு மனிதன் தன் குடும்பத்துக்கு பொறுப்புதாரி ஆவான். ஒரு பெண் தனது கணவனின் வீடு, குழந்தைகளுக்கு பொறுப்புதாரி ஆவாள். நீங்கள் அனைவரும் பொறுப்பாளர் ஆவீர்கள். உங்களில் அனைவரும் தன் பொறுப்பு பற்றி கேட்கப்படுவீர்கள்'.( ஆதாரம் புஹாரி : 893 )

• கணவன், பிள்ளைகளுக்குரிய உரிமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இடையூறாக தொழில் அமையாதிருத்தல்.

ஒரு பெண் தொழிலுக்கு செல்வதானது அவளது வீட்டு பொறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே பின்வருமாறு கூறியுள்ளார்கள் ' ஒரு பெண் தனது கணவனது வீட்டிக்கு பொறுப்புதாரியாக இருக்கிறாள். அவளுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக அவள் மறுமையில் விசாரிக்கப்படுவாள்'.( ஆதாரம் முஸ்லிம் : 4828 ) எனவே மறுமை நாளில் ஒரு ஆணை விட பெண்தான் வீட்டு பரிபாலணம், வீட்டு நிர்வாகம், வீட்டு பொறுப்பு போன்றன பற்றி விசாரிக்கப்படுவாள்.

• பெண்களின் இயல்புக்கு ஒத்துப்போக கூடிய தொழிலாக இருத்தல்.

அல்லாஹ் ஆண் பெண் இருபாலார்களையும் வௌ;வெறான அமைப்பில் படைத்துள்ளான். இந்த வகையில் ஆண்களால் செய்ய முடியுமான எல்லா தொழில்களையும் பெண்களால் செய்ய முடியாது. ஆண்களின் இயல்பிலிருந்து பெண்களின் இயல்பு வேறுபடுகிறது. ஆண்கள் பலசாலிகளாகவும், வலிமை மிக்கவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே ஆண்களுக்கு மட்டும் குறிப்பான கடினமான தொழில்களில் பெண்கள் ஈடுபடுவது கூடாது. உதாரணமாக கட்டிட, வீதி வேலைகளை குறிப்பிடலாம்.

• மார்க்க வரையறையை பேணி முழு உடம்பையும் மறைக்கக்கூடிய ஆடையணிந்து மணம் பூசாது வெளியேறல்.

ஒரு பெண் வீட்டை விட்டு தொழில் நிமித்தம் வெயியேறி செல்வதாக இருந்தால் மார்க்க வரையறையுடன் கூடிய ஆடை அணிந்து கொண்டே வெளியே செல்ல வேண்டும். ஆடை விரிவானதாகவும், உடலை மறைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஒரு பெண் மார்க்க வரையறையை மீறி ஆடை அணிந்து, மணம் பூசி வெயியேறி செல்வாளாயின் குழப்பம், பாதிப்பு என்பன அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ' ஒரு பெண் மணம் பூசிக் கொண்டு அந்த மணத்தினை நுகர வேண்டுமென்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து செல்வாளாயின் அவள் விபச்சாரி போன்றவளாவாள்'.

• ஆண்கள் கலக்கும் இடத்தில் கட்டாய தேவை தவிர தொழில் செய்யாதிருத்தல்.

அஜ்னபிய்யதான (திருமனம் முடிக்க அனுமதியான) ஆண்களுடன் சேர்ந்து தொழில் புரிவது பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் பணி புரியும் இடங்களில் பெண்கள் பணி புரிவதை ஷரீஅத் அனுமதிக்கவில்லை. இவ்வாறு பணி புரிவதன் மூலம் அதிகமான தீய விளைவுகள் ஏற்படுவதுடன் பெண்களின் கற்புக்கே பாதகமான பல ஆபத்தான விளைவுகளும் ஏற்பட வாய்புகளுண்டு.

• ஆண்களுடன் தனிமையிலிருந்து தொழில் செய்யாதிருத்தல்.

பெண் ஆணுடன் தனிமையில் தொழில் புரிவது ஹறாமாகும். இதனை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் ' ஒரு பெண் ஆணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் அங்கு மூன்றாம் நபராக ஷைதான் இருக்கிறான்'

• மஹ்ரமான துணையுடன் பிரயாணம் செய்தல்.

திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட ஆணின் துணையின்றி பெண் தொழிலுக்கு செல்ல முடியாது. ஏனெனில் பெண்கள் துணையின்றி பிரயானம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கன்டித்தார்கள். ' அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட பெண் தனக்கு மஹ்ரமான துணை இல்லாமல் ஒரு இரவு-பகல் தூரத்தினை பயணம் செய்வது ஹலாலாகாது'

• திருமணம் செய்தல், குழந்தை பெறல் போன்ற கடமையான விடயங்களுக்கு தொழில் தடை இல்லாமல் இருத்தல்.

வேலையை காரணம் காட்டி ஒரு பெண் திருமணம் முடிக்காமல் இருப்பதையும், அதனை பிற்போடுவதையும், பிள்ளை பெறாதிருப்பதையும் இஸ்லாம் தடை செய்கிறது.

பொதுவாக வீட்டுக்கு வெளியே பெண்கள் பணிபுரிவதைப் பொறுத்தவரையில் அவர்களோடு சம்மந்தப்பட்ட , சமூகத்திற்கு அவசியம் தேவையான சில தொழில்களில் தங்களது வீட்டுக்க கடமைகளை சரிவர நிறைவேற்றிக் கொண்டு ஈடுபடுவதை இஸ்லாம் ஒருபோதும் தடைசெய்யவில்லை.

சுருங்கக் கூறின் பெண்கள் தொழில் செய்வது அவர்களது அடிப்படை கடமைகளையும் பொறுப்புக்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!