Dharul Hudha Ladies College For Arabic & Islamic Studies.

Main Street
Maruthamunai-32314
Kalmunai, Sri Lanka
Tel : +94672226424

இஸ்லாத்தின் பார்வையில் அறிவின் அவசியம்

மௌலவியா: பாத்திமா ஸீனத் பின்த் அப்துல் கப்பார்(ஹுதாஇய்யா)

அறிவும் அறிவியலும் இன்றி நாகரீகம் தோன்ற முடியாது என்பது பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு முரணாணது; அது அறிவியலை புறக்கணிக்கின்றது என்ற வாதம் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். ஏனெனில் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல. அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமாகும்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமும், ஏக இறைவனின் மூல வாக்குமாகிய அல்குர்ஆனில் முதன் முதலாக இறங்கிய வசனங்களே அறிவைப் பற்றியும் , அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம். இவ்வாறு அறிவு எனும் பொருள்படும் 'இல்ம்' என்ற பதம் அல்குர்ஆனில் கிட்டத்தட்ட 80இடங்களில் இடம்பெற்றுள்ளது.

'(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்.' (96:1-5)

மேற்கூறப்பட்ட அல்குர்ஆனின் ஆரம்ப ஐந்து வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய வசனங்களும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன. '(நூன்) எழுதுகோலின் மீதும் அதனைக் கொண்டு அவர்கள் எழுதுபவை மீதும் சத்தியமாக!' (68:1)

ஆராயுமாறும் சிந்திக்கும்படியும் மனிதர்களைத் தூண்டுகின்ற மற்றும் கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு தூண்டுகின்ற ஏராளமான வளனங்களை அல்குர்ஆனிலே காணலாம். '(நபியே!) நீர் கூறும், பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்' (29:29)

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும், அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 வசனங்கள் காணப்படுகின்றன. மேலும் இயற்கை விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், விலங்கியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் போன்ற அனைத்துத் துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளையும்,அவற்றோடு தொடர்புடைய பல அடிப்படைகளையும் அல்குர்ஆனிய வசனங்கள் விபரிக்கின்றன.

இன்றைய உலகில் எத்தனையோ கண்டுபிடிப்பக்கள் அல்குர்ஆனை அடிப்படையாக வைத்தே திகழ்கின்றன. அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றது. 'அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.' (35:28)

மேலும், அல்குர்ஆன் அறியாமையையும்,மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது. 'நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்;றன. எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் உணரமாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன் எனினும் அவற்றைக் கொண்டு அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு காதுகள் உண்டு அவற்றைக் கொண்டு கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். அன்றியும் ,அவற்றை விட வழிகெட்டவர்கள்.' (7:179)

இதுவரை நோக்கியதிலிருந்து அல்குர்ஆன் அறிவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறே ஸுன்னா அறிவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி பின்வருமாறு நோக்கலாம்.

பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் 'கிதாபுல் இல்ம்' என்ற பொயரில் அறிவைப் பற்றி பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தை காண முடியும். மிகவும் நம்பகமான ஹதீஸ் கிரந்தமாகிய ஸஹீஹுல் புகாரியில் 'கிதாபுல் இல்ம்' என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ((ஒருவர் ஓர் அறிவைத்தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.)) - முஸ்லிம் - இதிலிருந்து ஒருவரது அறிவைத் தேடும் பணியானது அவரை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது என்பதனை விளங்கிக்கொள்ள முடியும். இங்கு அறிவு எனப் பேசப்படுகின்ற விடயம் எவ்வகையானது என்பது குறித்து முதலில் நாம் விளங்க வேண்டும்.

பொதுவாக அறிவு என்பது இரு வகையாகக் காணப்படுகின்றது.

1- மனிதனது ஆன்மீக, தார்மீக மேம்பாட்டுக்கு உதவும் அறிவு.

2- உலக வாழ்வில் மனித சுபீட்சத்திற்கு துணைபுரியும் அறிவு.

இவற்றில் முதல்வகை அறிவு இறைவனால் இறைத்தூது மூலம் வழங்கப்பட்டது. அல்குர்ஆனும், அல்ஹதீஸும் இந்த அறிவின் மூலாதாரங்களாக விளங்குகின்றன. இரணடாம் வகை அறிவு மனிதனது அவதானம், ஆராய்ச்சி போன்ற பகுத்தறிவின் மூலம் பெறப்படுவதாகும்.

இவ்விரு வகை அறிவுக்கும் இடையில் இஸ்லாமிய நோக்கில் முரண்பாடுகள் எதுவுமில்லை. மாறாக, இவை இரண்டினதும் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவே தான் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற ஆன்மீகத் துறை சார்ந்த கலைகளில் மாத்திரமன்றி வானவியல், கணிதம், மருத்துவம், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு அவற்றில் முன்னோடிகளாகவும் விளங்கினார்கள்.

இஸ்லாமிய நோக்கில் அறிவானது கூறுபோடப்படுவதில்லை. பயன்மிக்க அனைத்துக் கலைகளையும் இஸ்லாம் வரவேற்கத்தக்க அறிவாகவே கொள்கின்றது. இந்த அடிப்படையில் இறைவனது ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துகின்றது எனலாம். ஏனெனில் பயனுள்ள எல்லா வகையான அறிவினதும் மூலமாக இருப்பவன் அந்த ஏக இறைவனே.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் கல்வி என்பது பாட போதனையுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மாணவனது மூளையில் தகவல்களை திணிப்பது அதன் நோக்கமல்ல. மாறாக, அது தனிமனிதனது ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடியதாக அமைய வேண்டும். மனிதனது ஆளுமை முழுமையாக வளர்ந்து, ஓர் உன்னதமான மனிதனை உருவாக்குவதே இஸ்லாமியக் கல்வியின் ஆன்மாவாக அமைவது பண்பாட்டுப் பயிற்சியாகும். மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டுக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகக் கல்விப் போதனை அமைய வேண்டும் என்பதில் இஸ்லாம் கண்டிப்பாக உள்ளது. ஏனெனில் அதுவே மனிதனை மறுமை வாழ்வில் வெற்றிபெறச் செய்யும்.

எனவே மேற்படி ஆய்வின் மூலம் இஸ்லாத்தின் பார்வையில் அறிவானது இவ்வுலக மக்கள் யாவருக்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு இறைவனால் வலியுறுத்தப்பட்ட விடயமாக விளங்குகின்றது. மேலும் அதன் மூலமே ஈருலகிலும் வெற்றிபெற முடியும் எனலாம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!