மருதமுனையின் மூத்த ஆலிம்களில் ஒருவரான அஷ்ஷெய்க் A. L. A. S. முஹம்மது முபாரக் (பாரி) அவர்களின் மறைவு மருதமுனைக்கு மட்டுமல்ல ஆலிம் சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும்.
1944. 9. 25 ஆம் தேதி அன்று மருதமுனை மண்ணில் பிறந்த இவர்கள் தனது 9 ஆவது வயதில் மார்க்க கல்வியை கற்பதற்காக வெலிகாமத்தில் அமைந்துள்ள மதரஸத்துல் பாரி எனும் ஒரு பழமையான கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். 1958 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார்கள். இளம் வயதில் ஆலிமாக பட்டம் பெற்ற இவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அல்குர்ஆனை மனனமிடுதல், மார்க்க கல்வியை தேடுதல், சுய கற்றல், கற்பித்தல் மற்றும் பொதுப் பணிகளுக்காக செலவிட்டதோடு தன்னார்வமாக அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் ஆகவும் கருதப்பட்டார்கள்.
இதன் அடிப்படையில் இலங்கையின் ஆசிரியர் சேவையில் அரச மவ்லவி ஆசிரியராக இணைத்துக் கொள்ளப்பட்ட இவர்கள் முதலில் பதுளை மகளிர் கல்லூரியில் நியமனம் பெற்றதோடு இவர்களது கற்பித்தல் பணியும் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து
மருதமுனையில் அல்மனார் மத்திய கல்லூரி மற்றும் அல்ஹம்ரா வித்யாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் ஆசிரியராகவும் கடமையாற்றினார்கள்.
பின்னர் கல்முனை அல்ஹாமியா ஆண்கள் அரபுக் கல்லூரியில் நிர்வாக உறுப்பினராகவும், பாலமுனை ஸஹ்வா ஆண்கள் அரபுக் கல்லூரியில் நிர்வாக உறுப்பினராகவும், ஆசிரியராகவும், ஒலுவில் ஸஹ்வா பெண்கள் அரபுக் கல்லூரியில் அதிபராகவும், ஆசிரியராகவும், மருதமுனை தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியில் நிர்வாக சபையின் உதவித் தலைவராகவும், கல்லூரியின் உதவி அதிபராகவும், ஆசிரியராகவும் என பல பரிணாமங்களில் தனது சேவையை இடைவிடாது வழங்கி வந்தார்கள்,
அதுமாத்திரமன்றி மருதமுனை அக்பர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் கல்முனை முஹம்மதியா மஸ்ஜித் ஆகியவற்றில் இமாமாகவும் செயற்பட்டார்கள்.
அல்குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் மக்களுக்கு வழி காட்டுவதில் இலங்கை முழுவதிலும் இவர்கள் சேவையாற்றியதோடு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை சிரேஷ்ட உறுப்பினராகவும் இருந்து நற்பணியாற்றினார்கள்.
கல்வி, ஆய்வு மற்றும் மனிதநேய பணி என பல கோணங்களில் அளப்பரிய சேவை ஆற்றிய இவர்கள் 2008 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட தாருல் ஹுதா எனும் கட்டிடத்தில் ஒரு தூணாக நின்று அதை தாங்கிப் பிடித்துக் கொண்டு எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்தி உழைத்தார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
அனைவரினதும் அன்புக்கும் மரியாதைக்கும் உரித்தான இவர்கள் நேற்று 2025 ஜனவரி 28ஆம் திகதியன்று இறைவனின் ஆணைப்படி வபாத்தானார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர்களுடைய மறைவு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும்.
இவர்களது மறைவிறகுப் பின்னரும் இவர்களுடைய பணிகள் , எழுத்துகள் போதிக்கப்பட்ட சிந்தனைகள் என்றும் நிலைத்து நிற்கும் இன்ஷா அல்லாஹ்.
இவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்று பிராத்திப்பதோடு இவர்களது நல்லமல்களைப் பொருந்திக் கொண்டு, பாவங்களை மன்னித்து, கப்ருடைய வாழ்க்கையை விசாலமாக்கி உயர்ந்த சுவனமாகிய ஜன்னத்துல் பிர்தவ்ஸை இவர்களுக்கு வழங்க வேண்டும் என வல்ல அல்லாஹ்விடம் தாருல் ஹுதா அறபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி நிருவாகம், விரிவுரையாளர்கள், மாணவிகள் என அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.